5 நாட்களாக நகைப்புக்குரிய போராட்டத்தை நடத்திய வைத்தியர்கள்: பொது மக்கள் கடும் விசனம்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) வைத்தியர்கள் கடந்த 5 நாட்களாக தங்களுடைய சுயநலக் கோரிக்கைக்காக நகைப்புக்குரிய போராட்டத்தை நடத்தினார்கள் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரி இன்று (08) பொதுமக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அண்மைய நாட்களில் குறிப்பாக கடந்த 5 நாட்களில் எந்தவித நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்படாமல் வைத்தியசாலை மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இந்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்ற வைத்திய அத்தியட்சகர் மட்டும் கடந்த 5 நாட்களும் தனியாக இருந்து பல்வேறு சிகிச்சைகளை வழங்கி வருவதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.
இந்தவேளையில் அந்த வைத்தியருக்கு கைகொடுக்காமல் தங்களுடைய சுயநல கோரிக்கைகளுக்காக இந்த வைத்தியசாலையை நம்பியிருக்கும் 60 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தென்மராட்சி மக்களை கைவிட்டு பணிப்புறக்கணிப்பு, தொழிற்சங்க போராட்டம் என நகைப்புக்குரிய போராட்டத்தை இந்த வைத்தியர்கள் நடத்தியதை நாங்கள் கண்டோம்.
இந்த வைத்தியசாலையினால் பயனடையும் பொதுமக்கள் என்ற ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஆரம்பித்து இரண்டாவது நாளிலேயே நாங்கள் இந்த வைத்தியசாலை நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் எல்லோரும் ஒன்றிணைந்து உடனடியாக வைத்தியசாலைக்கு வந்து கடமைகளைப் பொறுப்பேற்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குமாறு அந்த வைத்தியர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தோம்.
மக்கள் எழுச்சி போராட்டம்
ஆனால் அவர்கள் கடந்த 5 நாட்களாக மக்கள் மீதும் நோயாளிகள் மீதும் எந்தவித கரிசனையும் காட்டாமல் தங்களுடைய போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் மாபெரும் மக்கள் எழுச்சி நடைபெறப் போகின்றது என்பதை தெரிந்து நள்ளிரவில் திருடர்கள் போல வைத்தியசாலை பின்புற வாயில் வழியாக வந்து வைத்தியசாலைக்குள் உள்நுழைந்ததை நாங்கள் அறிந்துள்ளோம்.
யாழ் மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையாக இருக்க வேண்டிய இந்த வைத்தியசாலை இவ்வளவு காலமும் முன்னேற்றமின்றி இன்றும் கிராமிய வைத்தியசாலை போன்று காணப்படுகின்றது.
ஆனால் தான் பதவியேற்ற 20 நாட்களுக்குள் பல்வேறு பணிகளை அதிரடியாக செய்த வைத்தியர் அர்ச்சுனா அவர்களை இந்த வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றுமாறு ஒரு பொய்யான கோரிக்கையை முன்வைத்து அவர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தார்கள்.
ஆகவே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அந்த வைத்தியர்களை பணிக்கு திரும்புமாறு நாங்கள் வைத்திருந்த கோரிக்கைக்கான கெடு காலம் நேற்றுடன் நிறைவடைந்து விட்டது.
எனவே வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இந்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக தொடர்ந்தும் இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் இன்று இந்த போராட்டக்காரர்கள் முன்பு உறுதி கூற வேண்டும். அவருக்கான நியமனக் கடிதத்தினை எங்களுக்கு முன்னாலேயே மீள வழங்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்“ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |