அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சோதனை: சிறிலங்கா காவல்துறை அதிரடி
நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அனைத்து வழக்கறிஞர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பதில் காவல் துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று அறிவித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பதில் காவல் துறை மா அதிபர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், வழக்கறிஞர் வேடமணிந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட காவல்துறை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சந்தேகநபரை அடையாளம் காணும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
காவல்துறை நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பதில் காவல் துறை மா அதிபர், குறித்த துப்பாக்கிச் சூடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கும் இடையிலான மோதல்களின் விளைவு என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டில் குற்றங்களைக் குறைக்க, பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய சிறிலங்கா காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்படும் பாதுகாப்பு
இதேவேளை, இன்றைய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்கள் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சோதனை இல்லாததை பயன்படுத்திக் கொண்டதாக சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு வழக்கறிஞர்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் காவல் துறை மா அதிபர் கூறியுள்ளார்.
அதன்படி, இந்த விடயத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஆயுதமேந்திய அதிகாரிகளை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தும் அனுமதி பெறப்படும் என்றும் பதில் காவல் துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

