செம்மணி புதைகுழி அகழ்வில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரி நீக்கம் : NPP எம்.பியின் அறிவிப்பு
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரியை நீக்கியமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா (Shri Bhavananda Raja) தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையில் இருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டமை தொடர்பிலே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் அரசாங்கம் தங்கு தடை இன்றி நீநி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் குறித்த புதைகுழி அகழ்வுப் பணியில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் ஒருவரை அதிலிருந்து நீக்கி உள்ளனர்.
சட்ட வைத்திய அதிகாரி
நாடாளுமன்ற சுகாதார மேம்பாட்டு உயர்மட்ட குழுவில் நான் பங்குபற்றிய நிலையில் செம்மணி அகழ்வில் மாதிரிகளை சேகரிப்பது ஆராய்வது தொடர்பில் மேலும் ஒரு சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

அதன் அடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு மேலதிகமாக யாழ். தீவகத்தில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி அகழ்வுப் பணிகளில் கடமையாற்றினார்.
குறித்த வைத்தியர் மூன்று மாதங்கள் மட்டுமே கடமையாற்றியதாக அறியக் கிடைக்கும் நிலையில் குறித்த சட்ட வைத்திய அதிகாரி நீக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி மீண்டும் இணைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |