கொன்று புதைக்கப்பட்ட மக்கள் - அதிர வைக்கும் ஆணைக்குழுவின் அறிக்கை
செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 90% க்கும் மேற்பட்ட சடலங்கள் சாத்தியமான நீதிக்கு புறம்பான கொலைகளைக் குறிக்கும் வகையில் புதைக்கப்பட்டிருந்தன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தளத்தில் நடைபெற்று வரும் விசாரணை குறித்த விரிவான அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் முன்னேற்றம் மற்றும் குறிப்பிடத்தக்க சவால்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன் நீதி அமைச்சர், காவல்துறை மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, உயர்கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு 16 பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நீதிக்கு புறம்பான கொலை
கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் பணியில், புதைகுழி தளம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவத் துறை மற்றும் காணாமல் போனோர் அலுவலகம், நீதிவான்கள், தடயவியல் நிபுணர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சந்திப்புகள் இடம்பெற்றன.
அறிக்கையிடும் காலப்பகுதியில், 200 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டதுடன், முதற்கட்ட கண்டுபிடிப்புகள் 90% க்கும் மேற்பட்ட உடலங்கள் சாத்தியமான நீதிக்கு புறம்பான கொலைகளைக் குறிக்கும் வகையில் புதைக்கப்பட்டிருந்தன என்பதைக் குறிக்கின்றன.
போதுமான தடயவியல், மானுடவியல் மற்றும் தொல்பொருள் நிபுணர்கள் இல்லாதமை, மேம்பட்ட கார்பன்-டேட்டிங் முறைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் மரபணு பகுப்பாய்வில் உள்ள சவால்கள் உள்ளிட்ட நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய இடைவெளிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் ஊடக சுதந்திரம்
நிதியுதவியில் தாமதங்கள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் ஏற்படும் மிரட்டல்கள், பொறுப்புக்கூறல் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு கவலைகளை எழுப்பியுள்ளது.
இதனிடையே, குறித்த அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கிய பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளது.
அதன்படி, மனித புதைகுழி விசாரணைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்குதல், மேம்பட்ட தடயவியல் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெறுதல், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மரபணு வங்கியை நிறுவுதல், அரசு அதிகாரிகளால் கடுமையான குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கான ஒரு சுயாதீன அலுவலகத்தை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
அத்துடன், சாட்சிகள் அல்லது ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்துவதை சட்ட அமுலாக்கம் தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
விசாரணையை திறம்பட முடிக்கவும், இடத்தில் புதைக்கப்பட்டு என்புக்கூடுகளாக மீட்கப்பட்டவர்களில் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசரத் தேவையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
