ரஷ்யாவுடன் இணைந்து சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் இந்தியா
சென்னையில் இருந்து தென்சீனக்கடல் வழியே ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்தை இணைக்கும் கடல்வழி பாதையை தொடங்குவதில் மத்திய அரசு கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பெருங்கடலில் அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு அது உரிமை கோருகின்ற தென்சீனக் கடலிலேயே "ரஷ்யாவுடன்" இணைந்து நின்று பதிலடி தர தயாராகிறது இந்திய அரசு.
இந்தியாவை சுற்றிய நாடுகளின் துறைமுகங்களில் கால் பதித்து முத்துமாலை திட்டத்தை நிறைவேறி வருகின்ற சீனா இந்தியாவின் அத்தனை அண்டை நாடுகளையும் இந்தியாவிடம் இருந்து பிரித்து இந்திய பெருங்கடலில் தமது கடல் வழி வர்த்தக பயணத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.
ஜெய்சங்கர் புடினுடன் ஆலோசனை
அண்மையில் இந்தியாவுக்கும் மாலைதீவுக்குமான உறவை முறித்ததில் முதன்மை பங்கு வகித்தது சீனாதான் எனக் குறிப்பிடப்படுகின்ற நிலையில் சீனாவின் இத்தகைய முயற்சிகளுக்கு பதிலடிதான் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கான கடல் வழி வர்த்தக பாதையை தொடங்குவது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கான கடல் வழி பாதையை உருவாக்குவது என்பதுதான் மத்திய அரசின் திட்டம்.
அண்மையில் ரஷ்யா சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக ரஷ்யா அதிபர் புடினுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு விளாடிவோஸ்டாக் துறைமுக நகருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்த போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றான, "இந்தியக் குடியரசில் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்திற்கும், விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கும் இடையில் கடல்சார் தகவல் தொடர்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியக் குடியரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும், ரஷ்யக் கூட்டமைப்பின் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் இடையில் விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒப்பந்தமும்" அடங்கும்.
அப்போது பிரதமர் மோடி விளாடிவோஸ்டாக் துறைமுக நகருக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன் 4 மாநில முதல்வர்களும் பயணம் மேற்கொண்டனர்.
மோடியின் கருத்து
இப்பயணத்தின் போது பிரதமர் மோடி தெரிவிக்கையில்
”இந்திய வர்த்தக அமைச்சரும், நான்கு மாநிலங்களின் முதலமைச்சர்களும், 150 வர்த்தகர்களும் விளாடிவோஸ்டாக் நகருக்கு வந்துள்ளனர். தூரக்கிழக்கின் சிறப்புத்தூதருடனும், தூரக்கிழக்கின் 11 ஆளுநர்களுடனும் நடத்தப்பட்ட சந்திப்பு நல்ல விளைவுகளைத் தந்துள்ளன.
மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் இடையேயான உறவுகள் ஒரு கட்டமைப்பை நிறுவியுள்ளது. நிலக்கரி, வைரம், சுரங்கம், அரிய கனிமங்கள், வேளாண்மை, வனம், காகிதம் மற்றும் காகிதக்கூழ், சுற்றுலா போன்றவை பல புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளன.
பகுதிகளுக்கு இடையேயான தொடர்பை அதிகப்படுத்த தற்போது சென்னைக்கும், விளாடிவோஸ்டாக் நகருக்கும் இடையே கடல்வழி போக்குவரத்துக்கும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது” எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |