பிறக்கும்போதே குழந்தைகளுக்கு அடையாள அட்டை -கோட்டாபயவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சமுக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி போடுவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டை இல்லாதது குறித்து கவலையாக இருப்பதாக சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே, தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளின்போது, அவர்களை அடையாளப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அவர்களுக்கான பிறப்புச் சான்றிதழை வழங்கும்போது, அடையாள அட்டை இலக்கம் மற்றும் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.