தீ விபத்தில் பலியான குழந்தைகள் விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள்! விசாரணையில் சிக்கிய தந்தை
மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள விடுதியின் அறையில் தங்கியிருந்த இரு குழந்தைகள் நேற்று புதன்கிழமை (27) மாலையில் கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் ஆரம்பக்கட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்ததை அடுத்து பிள்ளைகளின் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தெரிய வருகையில்,
போலி அடையாள அட்டை
இந்த விபத்தில் இரு குழந்தைகள் மூச்சு திணறி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தைகளின் தந்தையாரின் அடையாள அட்டையை விசேட புலனாய்வு பிரிவினர் பரிசோதனை செய்த போது குறித்த அடையாள அட்டைக்கு சொந்தமானவர் பதுளையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அவருடைய பழைய அடையாள அட்டை 2023ம் ஆண்டு தொலைந்து போயுள்ள நிலையில், சட்டரீதியாக புதிய அடையாள அட்டை பெற்று தற்போது கடவத்தையில் வசித்து வருகின்றார்.
இதன்போது பதுளையைச் சேர்ந்தவரின் தொலைந்த அடையாள அட்டையை எடுத்து கொண்ட உயிரிழந்த குழந்தைகளின் தந்தையான 31 வயதுடைய அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த ஹண்டி சுபுன் எரந்த சில்வா அவரது உண்மையான பெயர் முகவரியை மறைத்து பதுளையில் உள்ளவரின் அடையாள அட்டையை தான் என காட்டி வந்துள்ளார்.
இதனை கண்டறிந்த விசேட புலனாய்வு பிரிவினர் காவல்துறைக்கு சம்பவங்கள் குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து மனைவிக்கு புற்றுநோய், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொய்களை கூறி இரு குழந்தைகளையும் ஆலயங்கள், பள்ளிவாசல்கள், பொது இடங்கள் என மாவட்டம் மாவட்டமாக கொண்டு சென்று பிச்சை எடுத்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இதன்போதே கடந்த 20 ம் திகதி மட்டக்களப்புக்கு வருகைத்தந்த அவர், மனைவி காத்தான்குடி வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை பார்க்க வந்துள்ளதாக பொய் கூறி அறையை வாடகைக்கு எடுத்துள்ளார்.
தீ பற்றி இரு குழந்தைகளும் உயிரிழப்பு
அதன் பின்னர் மனைவியை காத்தான்குடி வைத்தியசாலைக்கு போய் பார்த்து விட்டு வருவதாக குழந்தைகளுடன் வெளியேறி அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று மனைவிக்கு புற்றுநோய் என பிச்சை எடுத்து வந்துள்ளார்.

சம்பவ தினமான பிற்பகல் 2.00 மணிக்கு குழந்தைகளை அறையில் வைத்து பூட்டிவிட்டு மாடியின் கீழ் தரையில் உள்ள மது விற்பனை நிலையத்தில் சென்று மது அருந்திவிட்டு சுமார் 2 மணித்தியாலத்தின் பின்னர் அறைக்கு சென்ற போது அங்கு தீ பற்றி இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகவும் அவரது மனைவி மாத்தறையில் அவரது ஊரில் இருப்பதாகவும் காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அது மட்டுமல்லாது கடந்த 2021.03.10 அத்துருகிரிய காவல் நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டதுடன் (குற்றச்சாட்டின்றி) 2022.03.21 சப்புகஸ்கந்த காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டடுள்ளார்.
மேலும், 2022.09.10 சப்புகஸ்கந்த காவல் நிலையத்தில் நீதிமன்ற பிடியாணை மற்றும் அனுராதபுரம், கொழும்பு போன்ற பல பிரதேசங்களில் குழந்தைகளை வைத்து பண மோசடி செய்துள்ளதாக காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறு பல பொய்களை கூறி குழந்தைகளை வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ள குறித்த நபரை இன்று வியாழக்கிழமை (28) இரவு கைது செய்ததுடன் குழந்தைகளின் தாயார் வரவழைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மட்டு. தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |