கப்பல் விவகாரம் -''தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள்'' -இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனா
'தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள்''
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வழமையான செயற்பாடுகளில் தலையிடாமல் இந்த விடயத்திலிருந்து தொந்தரவு செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என, சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இந்தியாவுக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த திட்டமிடப்பட்ட சீன விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆராய்ச்சிக் கப்பலான 'யுவான் வாங் 5' வருவதை ஒத்திவைக்குமாறு பீஜிங்கை இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.
மூன்றாந்தரப்பினரை இலக்காகக் கொண்டவை அல்ல
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், பீஜிங் இந்த அறிக்கையை கவனத்தில் கொண்டுள்ளது., "சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை இரு நாடுகளும் சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்து பொதுவான நலன்களைப் பூர்த்தி செய்கின்றன.இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு செயற்பாடுகள் மூன்றாந்தரப்பினரை இலக்காகக் கொண்டவை அல்ல.

பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று தெரிவித்த அவர், இலங்கையின் இந்த நடவடிக்கை இந்தியா வெளிப்படுத்திய கவலைகளுக்கு காரணம் என்று குறிப்பிட்டார்.
"இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அது தனது சொந்த வளர்ச்சி நலன்களில் மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க முடியும்," என்று அவர் கூறினார்.
ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்கவேண்டும்
"சீனாவின் அறிவியல் ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்கவேண்டும். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது" என்று வாங் குறிப்பிட்டார்.

இலங்கை இந்தியப் பெருங்கடலில் ஒரு போக்குவரத்து மையமாக உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளின் பல அறிவியல் ஆய்வுக் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் மறுவிநியோகத்திற்காக நிறுத்தப்படுகின்றன. "சீனா எப்பொழுதும் ஆழ் கடல்களில் செல்வதற்கான சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் கடலோர நடுகளின் அதிகார வரம்பிற்கு அவர்களின் கடல்களுக்குள் அறிவியல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு முழுமையாக மதிப்பளிக்கிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.