அமெரிக்க பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களுக்கு தடை விதித்த சீனா
அமெரிக்காவின் ஐந்து பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது.
நேற்றைய தினம் (07) இது தொடர்பான செய்திக்குறிப்பு ஒன்றினையும் சீன வெளியுறவுத் துறை வெயிட்டுள்ளது.
சீனாவுக்குச் சொந்தமான தாய்வான் பிராந்தியத்துக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம், ‘ஒரே சீனா’ என்ற கொள்கை உடைக்கப்பட்டிருப்பதாகவும், அமெரிக்கா-சீனா இடையிலான 3 கூட்டறிக்கைகளின் நிபந்தனைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல், பல தவறான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, சீனா்கள் மற்றும் சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தன்னிச்சையாக தடை விதித்துள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்துகள் முடக்கம்
தவிரவும் தாய்வானின் அமைதி மற்றும் நிலைத்தன்மையையும் சீா்குலைப்பது மாத்திரமல்லாமல், சீனா் மற்றும் சீன நிறுவனங்களின் சட்ட உரிமைகள் மற்றும் நலன்களையும் பாதிக்கின்றது.
இதனால் அமெரிக்காவின் 5 பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்குத் தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.
மேலும், அந்த 5 நிறுவனங்களுக்குச் சொந்தமாக சீனாவில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிவா்த்தனைகள் மேற்கொள்ள தடை
தவிரவும் அந்த நிறுவனங்களுடன் சீனாவில் உள்ள தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளவோ, ஒத்துழைக்கவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘ஒரே சீனா’ என்ற கொள்கையை ஏற்று, அதற்கேற்ப அமெரிக்கா செயற்பட்டு, தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும்.
சட்டவிரோதமான ஒருதலைப்பட்ச தடைகள் மூலம், சீனாவை குறிவைப்பதை அமெரிக்கா கைவிட வேண்டும், இல்லையெனில் சீனா அதற்கு தக்க பதிலடி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவானுக்கு அமெரிக்காவின் எந்த ஆயுத விற்பனை ஒப்பந்தம் அல்லது அமெரிக்காவின் எந்தத் தடைக்கு சீனா எதிா்வினையாற்றியுள்ளது என்பது குறித்து சீன வெளியுறவுத் துறையின் செய்திக்குறிப்பில் எதுவும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அமெரிக்க பாதுகாப்பு தொழில் நிறுவனங்கள் சீனாவிடம் எதையும் விற்பனை செய்வதில்லை. எனவே, இந்தத் தடைகள் அமெரிக்காவிற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தம்மை தனி நாடு என்று தாய்வான் தெரிவித்து வரும் நிலையில், அதை தம்மிடம் இருந்து பிரிந்துபோன பகுதியாகவே சீனா கருதி வருவது குறிப்பிடத்தக்கது.

