இலங்கையில் இனமுறுகலை ஏற்படுத்தும் கச்சத்தீவு விவகாரம்: பாஜகவின் சதி!
கச்சத்தீவு விவகாரத்தை முன்னிறுத்தி பாஜக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கையில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் மோதல் நிலை ஏற்படலாமென அவர் எச்சரித்துள்ளார்.
இந்திய எல்லைகளை சீனா ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை மூடிமறைக்கும் நோக்கில் கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்
இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள பாஜக, கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென தெரிவித்து வருகிறது.
குறித்த விடயம் இலங்கையர்களை பாரியளவில் பாதிக்குமென்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது கட் சி உறுப்பினர்கள் நன்கு அறிந்திருப்பதாக பி.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர்கள் எதிர்நோக்க நேரிடம் பிரச்சினையை அறிந்திருந்தும், தேர்தல் மற்றும் அரசியல் சுயநலத்துக்காக கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் பாஜக பேசுவது கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பிரச்சினை
அத்துடன், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பதவி வகிக்கும் நரேந்திர மோடி, கச்சத்தீவு தொடர்பில் கடந்த 10 ஆண்டுகளாக பேசாது, தற்போது திடீரென குறித்த விடயத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதாக சிதம்பரம் கூறியுள்ளார்.
தேர்தல்களை இலக்காக கொண்டு பாஜக மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையில் பிரச்சினையை ஏற்படுத்துமென்பது வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |