சீன உரக்கப்பல் - சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை கடற்பரப்பிற்குள் சீனாவின் உரக் கப்பல் பிரவேசிப்பதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருத முடியாது என ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்டிக்கு இன்று விஜயம் செய்த ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மாகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
சீனாவிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் கொள்வனவு உத்தரவின் அடிப்படையில் உரம் இருப்புடன் கப்பல் ஒன்று பிரவேசித்த போதிலும், அதிகாரிகள் தற்போது அந்த உரத்தை நிராகரித்துள்ளனர்.குறித்த உரம் உரிய தரத்தை கொண்டிருக்காத நிலையில் அவற்றை நிராகரித்துள்ளனர்.
குறித்த கப்பல் நாட்டிற்குள் அனுமதிக்கப்படாது. அடுத்த சில நாட்களில் கப்பல் இலங்கை கரையை விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கின்றேன்.
சீனாவின் உரத்துடன் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த கப்பல் தொடர்பில் பலர் கருத்துக்களை வெளியிட்ட போதிலும், தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பான உயர்மட்ட அரச அதிகாரி என்ற வகையில் அதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என கூறுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.