பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய அதிநவீன போர்க்கப்பல்- குறி வைக்கப்படுகிறதா இந்திய பெருங்கடல்?
அனைத்து நட்பு நாடுகளின் கடற்படையை மேம்படுத்தும் வகையில் சீனா மிகப்பெரிய, அதிநவீன போர்க்கப்பலை பாகிஸ்தானுக்கு வழங்கி உள்ளது என சீனா கடற்படை ஆராய்ச்சி அக்கடமியின் மூத்த ஆராய்ச்சியாளர் ஜாங் ஜுன்ஷே தெரிவித்துள்ளனர்.
சீனாவின் தயாரிப்பில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இரகசிய செயல்பாடுகளை கொண்ட அதிநவீன போர்க்கப்பலை தயாரித்து வழங்கியுள்ளது. இப் போர்க்கப்பல் பாகிஸ்தான் கடற்படைக்காக கட்டப்பட்டது.
இதனை சீனா ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிஎஸ்எஸ்சி) வடிவமைத்துள்ளது. ஷாங்காய் நகரில் நடந்த விழாவில் இந்த போர்க்கப்பல் பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
சீன போர் கப்பல்களுடன் ஒப்பிடுகையில், புதிய கப்பலில் மேம்பட்ட ரேடார் அமைப்பு மற்றும் அதிக அளவிலான ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருப்பதால், சிறந்த வான் பாதுகாப்பு திறன் உள்ளது என்று சீன கடற்படை ஆராய்ச்சி அகடமியின் மூத்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து உருவாக்கிய ஜேஎப்-17 போர் விமானம் கடந்த ஆண்டு வெளிவந்தது. ஜேஎப்-17 பிளாக் 3 இன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி நடந்து வருகிறது என்று சீன சட்டமன்ற உறுப்பினரும், சீனா-பாகிஸ்தான் இணைந்து உருவாக்கிய போர் விமானத்தின் தலைமை வடிவமைப்பாளருமான யாங் வெய் தெரிவித்திருந்தார்.
சீனா மற்றும் துருக்கியில் இருந்து தலா நான்கு போர்க்கப்பல்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் மற்றொரு நட்பு நாடான துருக்கி, கராச்சியில் நான்காவது மில்ஜெம் (MILGEM) போர்க்கப்பல்கள் தாயாரிக்கும் தொழிற்சாலையை கட்டத் தொடங்கிய சில நாட்களில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்தியப் பெருங்கடல் பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், அதன் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன் அதிவேகமாக உயர வாய்ப்புள்ளதாக சீனா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.