சீன கப்பல் விவகாரம்! திட்டவட்டமாக அறிவித்தது சிறிலங்கா
எமக்கு இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள், எந்த நாடுகளையும் நாம் பகைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சீன கப்பல் விவகாரம் தொடர்பில் சிறிலங்காவின் பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
சீனக்கப்பல் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதால் இலங்கை - இந்திய உறவில் விரிசல் ஏற்படும் என்று வெளியாகும் செய்திகளை அடியோடு மறுக்கின்றோம்.
சிறிலங்கா அரசின் செயற்பாடு
இந்தக் கப்பலின் வருகை தொடர்பில் எழுந்த சர்ச்சையான கருத்துக்களையடுத்து இலங்கை அரசு இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்தது. கப்பல் வருகைக்குச் சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. அதற்கு இணங்கியே குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருகின்றது.
எமக்கு இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள், எந்த நாடுகளையும் நாம் பகைக்க முடியாது. இரு நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்குகின்றன. எனவே, இரு நாடுகளையும் நாம் அரவணைத்துக்கொண்டே பயணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
யுவான் வாங்-5 கப்பல் விவகாரம்
சீனாவின் உளவுக்கப்பலான யுவான் வாங்-5 கப்பல் இலங்கையின் துறைமுகமான ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நோக்கி கடந்த மாதம் சீனாவில் இருந்து புறப்பட்டது.
இந்நிலையில், இந்த கப்பல் விவகாரத்தை இந்திய அரசாங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், குறித்த கப்பலின் வருகை சற்று தாமதப்படுத்திய நிலையில் இலங்கைக்கு 600 கடல்மைல் தொலைவில் தரித்து நின்றது.
எவ்வாறாயினும் சீனாவுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் பல கட்டுப்பாடுகளுடன் யுவான் வாங் - 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.