சீனாவின் பெரும் திட்டம்! யுவான் வாங்கை அடுத்து ஜிபூட்டி - இந்தியாவுக்கு அதிர்வு
ஆபிரிக்காவில் அமைந்துள்ள குட்டி நாடான ஜிபூட்டியில் சீனா ஆதிக்கம் செலுத்துவது இந்தியாவுக்கு மற்றுமொரு அதிர்வை கொடுத்திருக்கிறது.
இந்தியப் பெருங்கடலிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துவதற்காக சீனா ஒரு மூலோபாய சுற்றிவளைப்பை செய்து வருகிறது.
இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக இந்தியாவைச் சுற்றி ஓா் ஆதிக்க வலையை சீனா விரித்து வருவதாக இந்தியாவும் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறது.
சீனாவின் இந்த மூலோபாய சுற்றி வளைப்பு சீனா - இந்தியாவுக்கிடையில் அரசியல் ரீதியிலான அமைதியின்மையை தோற்றுவிப்பது மாத்திரமல்லாமல், பிராந்திய ரீதியில் ஓா் அரசியல் முறுகலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஜிபூட்டி ( Djibouti)
இந்தியாவைக் குறி வைக்கும் வகையில் சீனா ஜிபூட்டி கடற்படை தளத்தில் செயற்பாடுகளைத் தொடங்கிள்ளது.
இந்திய - பசிபிக் பகுதியில் இது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்த நாட்டை தாண்டியும் பல்வேறு இடங்களில் இராணுவ தளங்கள் உள்ளன.
அதேபோல துருக்கி, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் சொந்த நாடுகளைக் கடந்து இராணுவ தளங்கள் உள்ளன.
போர் அல்லது சண்டை ஏற்படும் போது, எதிரி நாடுகளைத் தாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கும். சீனாவும் இதேபோல் தனது நாட்டுக்கு வெளியே இராணுவ தளம் வேண்டும் என்று எண்ணி இதற்கான வேலைகளை 2016இல் தொடங்கியது.
*** #OSINT ***#Chinese navy (PLAN) type-071 landing ship at China’s pier in Djibouti yesterday.
— H I Sutton (@CovertShores) August 14, 2022
Not part of the regular ‘escort task force’ in the region.
Possibly delivering vehicles or large equipment which cannot be brought in by air? pic.twitter.com/Vv6VcNMqub
இவ்வாறான தளத்தை அமைப்பதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள குட்டி நாடான ஜிபூட்டி.
சுமார் 590 டொலர் மதிப்பில் கட்டப்பட்டு வந்த இந்தத் துறைமுகம், இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது ஏடன் வளைகுடா மற்றும் செங்கடலைப் பிரிக்கும் பாப் - எல் - மண்டேப் ஜலசந்தியால் அமைந்துள்ளது.
குறிப்பாகச் சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக இருக்கும் சூயஸ் கால்வாய்க்கு மிக அருகில் அமைந்துள்ளது சீனாவின் இந்த ஜிபூட்டி தளம் ஒரு நவீன காலனித்துவ கோட்டையைப் போலக் கட்டப்பட்டுள்ளதாகவும் இது நேரடித் தாக்குதலைத் தாங்கும் வகையில் தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜிபூட்டியில் சாங்பாய் ஷான் (Changbai shan ship)
இந்தத் தளத்தில் கட்டுமான பணிகள் இன்னுமும் முழுமையாக முடியவில்லை என்றாலும் கூட தளத்தை முழு வீச்சில் சீனா பயன்படுத்தத் தொடங்கி உள்ளது.
குறிப்பாக, சீனாவின் முக்கிய கப்பலான சாங்பாய் ஷான் அங்கு இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. 25,000 தொன் எடையுள்ள இந்தக் கப்பல் சீனாவின் முக்கிய பாதுகாப்பு கப்பலாகக் கருதப்படுகிறது.
மிகப் பெரிய இந்தக் கப்பலே எளிதாக உள்ளே வந்து வெளியே செல்லும்படியாக சீனா தனது ஜிபூட்டி தளத்தைக் கட்டமைத்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் சீனா தனது வெளிநாட்டுத் தளங்களை எப்படி உருவாக்கி வருகிறது என்பது தெளிவாகப் புரிகிறது.
இலங்கையில் யுவான் வாங் - 5 (Yuan wang 5)
சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங் - 5 இலங்கைக்குச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பான செய்மதி படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இப்போது இலங்கையில் இருக்கும் யுவான் வாங் - 5 கப்பலால் இந்தியாவில் இருக்கும் செய்மதிகள் மற்றும் ஏவுகணைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இதனால் சீன உளவுக் கப்பலின் வருகையைப் பெரிய சந்தேகத்துடன் இந்தியா உற்றுநோக்கி வருகிறது.
இந்தச் சூழலில் தான் ஜிபூட்டி தளம் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜிபூட்டியில் சீனாவின் இருப்பு என்பது இந்தியப் பெருங்கடலில் அதன் இருப்பை நிலைநிறுத்துவதற்கான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இதனை அடுத்து பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகம், பிராந்தியத்திலும் சீனா தனது இருப்பை அதிகரிக்கத் திட்டமிடுகிறது. முதலில் இலங்கை, இப்போது ஜிபூட்டி, அடுத்து பாகிஸ்தான் என இந்தியாவைக் குறி வைக்கும் வகையிலேயே சீனா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜிபூட்டியும் இலங்கையும் சீனாவிடம் அதிக கடன்களை வாங்கியுள்ளன. அவர்களால் கடனை செலுத்த முடியாமல் போனதாலேயே சீனா தனது இருப்பை அதிகரித்தது.
இதே முறையைப் பயன்படுத்தி இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல்வேறு இடங்களில் தளங்களை அமைப்பதே சீனாவின் நோக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் முத்துக்களின் சரம் (String of Pearls)
தனது ஆதிக்கத்தை நிா்வகிக்க, கடல் ரீதியாக சுற்றிவளைக்கும் இவ்வாறான அரசியல் பொறிமுறைக்கு சீனா “முத்துக்களின் சரம்” (String of Pearls) என்ற பெயரை சூட்டியது.
இந்தியப் பெருங்கடலுக்கு அருகிலுள்ள நாடுகளின் கடல்சாா் கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களை தனது மூலோபாய திட்டத்திற்குள் உள்வாங்கி, இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் அதிகரிக்க சீனா மேற்கொண்ட அரசியல் காய் நகா்த்தலே இந்த முத்துக்களின் சரம் (String of Pearls) என்ற கடல்சாா் ஆதிக்க செயற்றிட்டம்.
சீனாவின் இந்த கடல்சாா் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான், ஈரான், கென்யா, பங்களாதேஷ், சூடான், இலங்கை எனத் தொடர்கிறது.
சீனாவின் பட்டுப் பாதை - ஒரு பட்டி ஒரு பாதை (Belt and Road Initiative)
இது ஒரு புறமிருக்க, சீன அதிபர் ஜீ ஜின்பிங் 2013ஆம் ஆண்டு சீனாவின் பட்டுப் பாதை என்ற பழைய கருத்தியலுக்கு பதிலாக, புதிய வணிக ரீதியிலான ஒரு பட்டி ஒரு பாதை (Belt and Road Initiative) என்ற திட்டத்தை முன்மொழிந்தாா்.
இந்தத் திட்டம் ஆசியா, ஆபிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை ஐரோப்பாவுடன் வா்த்தக ரீதியாக இணைப்பதை நோக்கமாகக் கொண்டதாக அறிவிக்கப்பட்ட போதும், சீனாவின் ஆதிக்க நுண் அரசியல் இந்த ஒரு பட்டி ஒரு பாதை (Belt and Road Initiative) திட்டத்திற்குள் மறைந்திருப்பது தெளிவாக வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது.
இந்த ஒரு பட்டி ஒரு பாதை (Belt and Road Initiative) திட்டத்தைக் காட்டி பல நாடுகளில் டிரில்லியன் கணக்கான டொலா்களை அந்தந்த நாடுகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சீனா அள்ளி இறைத்து வருவதுடன், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் புகையிரத பாதை மேம்பாட்டுத் திட்டங்கள், விளையாட்டரங்குகள் என்று அந்த நாடுகளுக்கு பிரயோசனத்தை கொண்டுவராத, சுமையான பல திட்டங்களை நிா்மாணித்தும் வருகிறது.
கடன் கொடுத்து அரசியல் நிகழ்ச்சி நிரல்
சீனாவின் இந்தக் கடன் நிதிக்காக அதி கூடிய வட்டியையும் செலுத்த இந்த நாடுகள் நிா்ப்பந்திக்கப் படுகின்றன.
அதி கூடிய வட்டிக்கு கடனைக் கொடுத்து தனது சுரண்டல் அரசியல் நிகழ்ச்சி நிரலை பல நாடுகளில் சீனா கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.
புவியியல் ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளின் கடல் முனைகளிலூடாக, அந்தந்த நாடுகளின் அரசியல், பொருளாதார, இராணுவ, துறைமுக மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ள சீனா, அந்த நாடுகளை தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியலை நன்றாக நிர்வகித்து வருகிறது.
தனது கடல்சார் அரசியல் நலன்களை அடிப்படையாக வைத்து ஜிபூட்டி, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஈரான், கென்யா, எாிட்ரியா போன்ற பல நாடுகளில் துறைமுக மேம்பாட்டுக்காக அதிக முதலீடுகளை சீனா செய்துள்ளது.
தொடர்புடைய செய்தி
சீனாவின் உளவுக்கப்பலுக்கு சவால் விடும் இந்தியாவின் துருவ் கப்பல்..!
சூடுபிடிக்கும் சீனக் கப்பல் விவகாரம்..! சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள உறுதிமொழி
YOU MAY LIKE THIS