ரணிலின் முறைக்கேடு! பிரித்தானியாவில் சிஐடி நடத்திய விசாரணை அறிக்கை தயார்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக விசாரிக்க பிரித்தானியாவுக்கு சென்ற சிஐடி அதிகாரிகள் குழு நடத்திய விசாரணை குறித்த தகவல்களை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ரூ. 16.6 மில்லியன் முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையின் பகுதியாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரித்தானியாவுக்கு பயணம் செய்த சிஐடி குழு நடத்திய மேலதிக விசாரணைகளின் பகுதிகளை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் சிஐடிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
எழுத்துப்பூர்வ கோரிக்கை
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேராவினால் கையொப்பமிட்ட கடிதம் மூலம் சட்டமா அதிபர் சிஐடி பணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர உதவிச் சட்டத்தின் விதிகளின் கீழ் பரஸ்பர சட்ட உதவிக்காக (MLA) பிரித்தானிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக சட்டமா அதிபர் முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.
வழக்கு விசாரணை
ஆவணங்களைத் தொகுப்பதில் உதவுவதற்காக, விசாரணைக்குப் பொறுப்பான அதிகாரிக்கு, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அறிக்கை அளிக்குமாறு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் அவ்வாறு செய்யவில்லை என்று சட்டமா அதிபர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய அதிகாரிகளிடமிருந்து பரஸ்பர சட்ட உதவி (MLA) பெறாமல் சிஐடி குழு லண்டனுக்குப் பயணம் செய்ததையும் அந்தக் கடிதம் சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவின் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |