கோடீஸ்வர வர்த்தகர் மரணம் - இந்தோனேஷியா பறக்கிறது சி.ஐ.டி
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட காவல்துறை குழுவொன்று இந்தோனேசியா செல்லவுள்ளதாக காவல்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 02ஆம் திகதி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும், இந்தக் கொலையின் பின்னர், ஒனேஷ் சுபசிங்கவின் பிரேசிலைச் சேர்ந்த மனைவியும், அவருக்கு உதவியாளராகக் கூறப்படும் பிரேசில் நாட்டுப் பெண்ணும் நான்கு வயது மகளுடன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனைவி, மகள் தப்பியோட்டம்

ஜகார்த்தா காவல்துறை விசாரணையில் அந்த கும்பல் கத்தாருக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.
ஜனவரி 20ஆம் திகதி, விடுமுறைக்காக தனது மனைவி, மகள் மற்றும் மனைவியின் உதவியாளருடன் ஒனேஷ் சுபசிங்க இந்தோனேஷியா சென்றுள்ளார்.
இலங்கையில் கொலைக்கான ஏற்பாடுகள்

இந்தக் குற்றம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ள போதிலும், கொலைக்கான ஏற்பாடுகள் இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரியவருவதால், காவல்துறை மா அதிபர் .சி.டி.விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எதிர்கால விசாரணைகளுக்காக சர்வதேச காவல்துறையின் உதவியைப் பெறத் தயாராக உள்ளது