நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு: மக்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக தீர்வு!
நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபை தீர்வு ஒன்றை வழங்கியுள்ளது.
அதன்படி, சந்தையில் விற்பனை செய்யப்படும் பொடி செய்யப்பட்ட தேங்காய் பால் அல்லது பொதி செய்யப்பட்ட திரவ தேங்காய் பாலை பயன்படுத்த நுகர்வோர் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேங்காய் பாவனை
தேங்காய் பாவனையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டிலேயே நுகரப்படுவதாகவும், பொடி செய்யப்பட்ட தேங்காய் பால் அல்லது பொதி செய்யப்பட்ட திரவ தேங்காய் பாலை பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை ஓரளவுக்கு தீர்க்க முடியும் எனவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளதோடு சில பிரதேசங்களில் தேங்காயின் அளவுக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
:
அத்துடன்,இலங்கையில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் (Coconut Research Institute) தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக அதன் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே (Nayani Arachchige) குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |