வரப்போவது அபாயம் மிக்க புத்தாண்டு!! எச்சரிக்கும் எதிரணி எம்.பி
எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டானது, பாற்சோறு உட்கொள்ள முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்கிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka).
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ள பின்னணியில், அவர்கள் கொள்ளையடிக்கும் நிலைக்கும், தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் பதிலளித்த அவர், ''2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனைப் பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்திப் பணிக்காக ஈடுபடுத்தியமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம்.
இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை.
தற்போது எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட, முடியாத அளவிற்கு டொலர் பிரச்சினை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக'' பாட்டலி சம்பிக்க ரணவக மேலும் தெரிவித்தார்.