அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களுடன் சிறிலங்கா கொமாண்டோ அதிகாரி கைது
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் பயணித்த சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவின் அதிகாரி ஒருவர் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களை கொண்டு சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி மதவாச்சி நகரில் பேருந்தில் கைப்பற்றப்பட்ட அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகளை கொண்டு சென்ற கொமாண்டோ அதிகாரி ஒருவரை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு மதவாச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று (03) மதவாச்சி காவல்துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர் எதிர்வரும் 6ஆம் திகதி வரையான 03 நாட்களுக்கு மதவாச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருமுறுகண்டி, கிளிநொச்சி இராணுவ முகாமில்
திருமுறுகண்டி, கிளிநொச்சி இராணுவ முகாமில் உள்ள இரண்டாவது கொமாண்டோ படைப்பிரிவில் கடமையாற்றிய 33 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த (02) ஆம் திகதி மாலை, ஆர்.எம்.ஐ.பி.ரத்நாயக்க உள்ளிட்ட விசேட காவல்துறை குழுவினர், இந்த நடவடிக்கையுடன் இணைந்து, மதவாச்சி நகரில் உள்ள ஹடிஸ் வீதித் தடைகளைப் பயன்படுத்தி, நீண்ட தூர சேவை பேருந்துகளை சோதனையிட்டனர்.
அங்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்தில் கொமாண்டோ படையினர் விடுமுறை பெற்று வதியாகம, புபுல, குருவிதான, மஹியங்கனை ஆகிய இடங்களில் உள்ள தமது வசிப்பிடத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
நீண்ட தூர சேவை பேருந்துகள் சோதனை
அங்கு, 04 மின்சார டெட்டனேட்டர்கள், 06 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், டி.என்.டி. 05 கிராம் அதிக சக்தி கொண்ட வெடிபொருட்கள் மற்றும் 20 அடி கயிறுகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இராணுவத்தினர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் (03) மதவாச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்படி, பிரதி காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு, மதவாச்சி காவல் நிலைய கட்டளைத் தளபதி ஆர்.எம்.ஐ.பி.ரத்நாயக்க நீதிமன்றில் கோரியுள்ளார்.
குறித்த கோரிக்கைக்கு மதவாச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெபிதிகொல்லாவ சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எம்.எஸ்.கே.விக்ரமநாயக்க மற்றும் மதவாச்சி காவல் நிலைய கட்டளைத் தளபதி ஆர்.எம்.ஐ.பி.ரத்னாயாம ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |