அநுர அரசின் அதிரடி : சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து சேதம் தொடர்பில் பெற்றுக் கொண்ட இழப்பீடுகள் மற்றும் அதற்காக முன்னெடுக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய விரைவில் இது குறித்த முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சொத்துக்கள் தொடர்பில் மதிப்பீடு
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ”இவ்வாறான பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்குவது எங்கும் குறிப்பிடப்படவில்லை. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நபரொருவருக்கு வழங்கப்படக் கூடிய அதிகபட்ச இழப்பீட்டு தொகை 25 இலட்சம் மாத்திரமே.
ஆனால் இந்த சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மதிப்பீட்டாளர்கள் குழு, அப்போதைய ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக செயற்பட்ட பிரசன்ன ரணதுங்கவால் (Prasanna Ranatunga) 2022ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது, பாதிக்கப்பட்ட நபரால் மதிப்பீட்டு குழுவை அழைத்து ஆலோசனை பெறவோ வழங்கவோ முடியாது.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆளுங்கட்சியின் எம்.பி.க்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்தமையால் மதிப்பீட்டாளர்கள் இவ்வாறு நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
வெளியாகவுள்ள அறிக்கை
இழப்பீட்டு மதிப்பீடுகளின் போது தாம் பாரிய அழுத்தங்களுக்கு உள்ளானதாக அப்போதைய பிரதேச செயலாளர்கள் பலர் குறிப்பிட்டிருந்தனர்.
அவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டு, செலுத்தப்பட்ட இழப்பீடு தொடர்பான பட்டியலையே நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். 5 இலட்சம் தொடக்கம் 90 வரை இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மாத்திரமே உள்ளடங்குகின்றனர். ஆனால் இன்னும் பிரதேசசபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் பலரும் இவ்வாறு இழப்பீடுகளைப் பெற்றுள்ளனர்.
இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் சார்பிலும் இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய இது குறித்த முழுமையான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)