அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைகள் குறித்து வெளியான தகவல்
இலங்கையில் அரச சேவை ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படும் பல்வேறு போட்டிப் பரீட்சைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் சின்னதம்பி பிரகாசன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய அளவிலான சேவைகளின் கீழ் சுமார் 12 முதல் 13 வகையான பிரதான சேவைகள் காணப்படுகின்றன.
அடிப்படைத் தகுதி
அவற்றில் இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, கட்டிடக்கலை சேவை, விஞ்ஞான சேவை, பொறியியல் சேவை மற்றும் மருத்துவ அதிகாரிகள் சேவை உள்ளிட்ட சேவைகள் அடங்குகின்றன.

இந்தப் போட்டிப் பரீட்சைகளில் பங்கேற்பதற்கான அடிப்படைத் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பெற்ற பட்டப்படிப்பு பொதுவாகக் காணப்படுவதுடன், சேவைக்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடுகின்றது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைய வயது வரம்புகள் மற்றும் ஏனைய தகைமைகள் மாறுபடக்கூடும்.
வர்த்தமானி அறிவித்தல்கள்
இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் கணக்காளர் சேவை போன்ற போட்டிப் பரீட்சைகளுக்கு அதிகளவான விண்ணப்பதாரர்கள் தோற்றுகின்ற போதிலும், கட்டிடக்கலை மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட சில சிறப்புச் சேவைகள் தொடர்பில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு காணப்படவில்லை.

இதன் காரணமாக, இத்தகைய சேவைகளுக்கான போட்டிப் பரீட்சைகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது.
எனவே, வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக வெளியிடப்படும் தேசிய அளவிலான போட்டிப் பரீட்சைகள் தொடர்பான தகவல்களை வேலை தேடுவோர் உள்ளிட்ட தகுதியுடையவர்கள் அறிந்துகொள்வதுடன், அது தொடர்பான தகவல்களை ஏனையோருடனும் பகிர்ந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |