அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சர்ச்சை...! ரணிலுக்கு எதிராக முறைப்பாடு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், ஐக்கிய மக்கள் சக்தி ( Samagi Jana Balawegaya) முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.
இந்த அறிவிப்பு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) முன்மொழியப்பட்ட அரசியல் ஊக்குவிப்பு திட்டத்தைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
இன்று ஆரம்பமாகியுள்ள அஞ்சல் மூல வாக்களிப்பு காலப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பின் காலம் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் சட்டத்தை மீறும் செயல்
எனவே, இந்த நடவடிக்கை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என தமது முறைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
மேலும், இது குறித்து தேர்தல் ஆணையகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான (2024 Sri Lanka elections) அஞ்சல்மூல வாக்களிப்பு முன்னதாக அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பெப்ரல் அமைப்பு (PAFFREL) கேள்வியெழுப்பியுள்ளது.
இந்த விடயத்தை ஆராயுமாறு வலியுறுத்தி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணையகத் தலைவருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |