மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி காவல்துறையில் முறைப்பாடு
மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு இன்று (04) ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என கோரி குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மனிதப் படுகொலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா, வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதன், வேலணை பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் உறுப்பினரான அனுசியா ஜெயகாந்த், அகில இலங்கை தமிழ் கங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் மற்றும் திருனாவுக்கரசு சிவகுமாரன், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரது பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
35 வருடங்களுக்கு முன்னர் ஒகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டதுடன் இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர்.
அதிகமான உடலங்கள்
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இற்கும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு இரண்டாம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன.
அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.
படுகொலை
இந்தநிலையில் குறித்த படுகொலை சாட்சியமாக உறவுகளை பறிகொடுத்த குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முன்பதாக கடந்த மாதம் 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் அனைத்து உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
