சக தமிழர் தொடர்பில் முரளிதரன் வைத்துள்ள நம்பிக்கை
தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்த முத்தையா முரளீதரன் 133 டெஸ்டில் 230 இன்னிங்சில் விளையாடி 800 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். அவர் 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இது தொடர்பாக அவுஸ்ரேலிய பத்திரிகை ஒன்றில் அவர் கூறியதாவது, கிரிக்கெட் உலகில் இன்றுள்ள சுழற்பந்து வீரர்களில் 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உள்ளவராக நான் இந்திய வீரர் அஸ்வினை மட்டும் பார்க்கிறேன். சென்னையை சேர்ந்த அஸ்வின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்.
அவரைத் தவிர்த்த மற்ற இளம் பந்துவீச்சாளர்கள் யாரும் அந்த சாதனையை நிகழ்த்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவுஸ்ரேலிய வீரர் நதன் லயனால் கூட இந்த சாதனையை நிகழ்த்த முடியாது. அவர் மீது நம்பிக்கை இல்லை. நான் விளையாடும் போது சமநிலை இருந்தது.
ஆனால் இன்று ஒருநாள், 20 ஓவர் போட்டிகள் வந்தபிறகு துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக கிரிக்கெட் மாறிவிட்டது. அப்போது ஆடுகளம் நன்றாக தட்டையாக அமைக்கப்படும். பந்து வீச்சாளர்களுக்கும் துடுப்பாட்ட வீரர்களுக்கும் சம அளவு ஒத்துழைக்கும்.
தற்போதுள்ள நிலையில் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக நீண்ட நேரம் வீசினால்தான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். வேகபந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீரர்களால் தான் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். ஆனால் களத்தடுப்பாளர்களை சரியான இடத்தில் நிறுத்துவதும், கடினமாக உழைப்பதும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.