தையிட்டியில் வெடித்த போராட்டத்தால் மோடி தரப்புக்கு காத்திருக்கும் சவால்...
தையிட்டி விவகாரம் காணிச் சொந்தக் காரர்களின் விவகாரமல்ல. அது தமிழ் மக்களின் தேசிய விவகாரம் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியீடு செய்த வராந்த அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் முழு விபரமும் வருமாறு தையிட்டி சட்ட விரோத விகாரை விவகாரம் மக்கள் மயமாதல் என்ற அடுத்த கட்டத்தை நோக்கி வளரத் தொடங்கி விட்டது.
தமிழ் மக்களின் சுயமரியாதை
கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ் உட்பட ஐவர் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

வேலன் சுவாமிகள் ஒரு மத குரு என்பதும் கணக்கிலெடுக்காமல் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்து மாலை அறுக்கப்பட்டு மாலையோடு சேர்த்து கழுத்து நெரிக்கப்பட்டது.
காவல்துறை வானுக்குள் அவர் பலவந்தமாக தள்ளப்பட்ட போது வானுடன் அவரது உடம்பு அடிபட்டது. இத்தனைக்கும் நான் வருகின்றேன் எனக் கூறியபோதும் காவல்துறையினர் தாக்கியிருந்தனர்.
இதே போல ஏனையவர்களும் தாக்கப்பட்டிருந்தனர். வலைதளங்கள் இத்தாக்குதலை தெளிவாக ஒளிபரப்பியிருந்தன. வேலன் சுவாமிகள் தாக்கப்பட்டமை தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு விழுந்த பேரடியாகும்.
தமிழ் மக்கள் பொதுவாகவே மதகுருமார்களுக்கு மிகப்பெரும் மதிப்பைக் கொடுப்பவர்கள். கடவுளின் தூதுவர்களாக அவர்களைப் பார்ப்பவர்கள்.
மத சுதந்திரம்
ஒரு பௌத்த மத குருவில் இப்படிக் கை வைப்பர்களா என்ற கேள்வியையும் அவர்கள் கேட்கின்றனர்.
திருகோணமலை புத்தர் சிலை விகாரத்தில் ஒரு பௌத்த பிக்கு காவல்துறை அலுவலரை கன்னத்தில் அறைந்த போதும் காவல்துறை அலுவலர் எதுவும் செய்யவில்லை.

இந்த தாக்குதல் மத சுதந்திரத்திற்கு விழுந்த பேரடியாகும். வேலன் சுவாமிகள் தாக்குதல் நடந்த இரவே யாழ். போதனா வைத்தியசாலை அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
வைரஸ் காய்ச்சலும் அவரைப் பீடித்திருந்தது. ஒரு வார காலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த அவர் தற்போது தனது ஆதீனம் திரும்பி உள்ளார்.
கத்தோலிக்க மதத்தலைவர்கள் அவரை ஆதீனத்தில் பார்வையிட்டதுமல்லாமல் கூட்டாக ஊடகவியலாளர் மாநாட்டையும் நடாத்தியுள்ளனர்.
வேலன் சுவாமிகள் தன்னைக் கொலை செய்வதற்கு அல்லது அங்கவீனமாக்குவதற்கு காவல்துறையினர் முயற்சித்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.
அன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் தையிட்டில் பிரசன்னமாகியிருந்தனர். எனவே முழுக்க முழுக்க அரசாங்கத்தின் மேலிட கட்டளையின் படியே இத்தாக்குதலும், கைதும் இடம்பெற்றிருந்தது.
சட்டவிரோதமான விகாரை
இதன்மூலம் அரசாங்கமே இப்போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. தாக்குதல் நடந்த அடுத்த நாளே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளனர்.
நயினாதீவு விகாராதிபதியும் யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியும் விகாரை சட்டவிரோதமானது என்றும் மக்களின் காணியில் கட்டப்பட்டுள்ளது என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றனர்.
நயினாதீவு விகாராபதி ஒரு படி மேலே சென்று அரசாங்கம் தலையிட்டு இந்த விவகாரத்தை தீர்க்காவிட்டால் தான் மக்களின் பக்கம் நிற்க வேண்டி வரும் எனக் கூறியிருக்கின்றார்.
தங்களுடைய விகாரைகளுக்கு எதிராகவும் மக்கள் கிளர்ந்தெழலாம் என அவர்கள் அஞ்சியிருக்கலாம். படையினரால் நீண்ட காலத்திற்கு விகாரைகளை பாதுகாக்க முடியாது.
சூழவுள்ள மக்களினால் தான் பாதுகாக்க முடியும் என்பது அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டு மக்களும் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருக்கின்றனர்.
இது ஆரம்பமாக இருந்தாலும் அது மேலும் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் எப்போதும் நீறு பூத்த நெருப்பாக இருக்கின்றது.
அது எந்த நேரமும் பற்றி எரியலாம் அது மத்திய அரசாங்கத்திற்கும் தெரியும். தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் தெரியும். தற்போது அங்கு தேர்தல் காலம்.
பாரதீய ஜனதா கட்சி எவ்வாறாவது தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. இதனால் ஈழத்தமிழர் விவகாரம் மேலெழும்புவதை அக்கட்சி விரும்பப்போவதில்லை.
இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு விவாகரத்தை தீர்க்கும் படி அழுத்தம் கொடுத்திருக்கலாம். அரசாங்கம் சமரச முயற்சிக்கு தற்போது வந்துள்ளது.
யாழ். அரசாங்க அதிபர் ஊடாக அந்த சமரச முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது இது தொடர்பாக அரசாங்க அதிபர் காணிச் சொந்தக்கார்களை சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றார்.
விகாரை அமைந்துள்ள காணியை மட்டுமட்டாக வரையறுத்துவிட்டு ஏனையவற்றை கட்டம் கட்டமாக விடுவிப்பது என்ற யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் தேசிய விவகாரம்
காணிச் சொந்தக்காரர்கள் காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக் கூறியிருக்கின்றனர்.
அரசாங்கம் சமரச முயற்சிகளை நோக்கி வந்தமைக்கு இந்தியாவின் அழுத்தமும் தொடர் போராட்டங்களின் தாக்கமும் காரணங்களாக இருக்கலாம்.

தற்போது தையிட்டி விவகாரம் காணிச் சொந்தக்காரர்களின் விவகாரமல்ல. அது தமிழ் மக்களின் தேசிய விவகாரம் என்ற வகையில் தமிழ் மக்களின் பொது விவகாரமாக மாறியுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படதைத் தொடர்ந்து சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரல் தான் தையிட்டி விவகாரம். தையிட்டி விகாரை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டியதும் அரசின் இராணுவம் தான்.
போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே மேலதிக கட்டிடங்களைக் கட்டியதும் இராணுவம் தான். தற்போது இதுவரை அதனைப் பாதுகாப்பதும் அங்கு வழிபாடு செய்வதும் இராணுவம் தான்.
எனவே இது முழுக்க அரசின் நிகழ்ச்சி நிரலில் ஒன்றாகும். இதன் பின்னுள்ள நோக்கம் இன அழிப்பு தவிர வேறு எதுவும் கிடையாது. இந்த விகாரையை அமைப்பதற்காக அரசாங்கம் தான் உருவாக்கிய சட்டங்களையே மீறியது.
தனியார் காணிகளில் சட்ட விரோத விகாரை கட்டுவதற்கு அரசிற்கு எந்த உரிமையும் கிடையாது.
ஒரு பிரதேசத்தில் ஒரு சிறிய கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் கூட அந்தப் பகுதி பிரதேச சபையின் எழுத்து மூல அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |