அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு கட்டுப்பாடு
அவசர மற்றும் அத்தியாவசியம் தவிர்ந்த சத்திரசிகிச்சைகளை சிறிது காலம் ஒத்திவைப்பதற்கு சுகாதார அமைச்சு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
சுகாதாரதுறை சார்ந்த விசேட மருத்துவ நிபுணர்களின் யோசனையின் பின் சுகாதார அமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
மருந்து, சத்திரசிகிச்சை உபகரணங்களின் தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திரசிகிச்சைகளுக்கான உபகரணங்களின் தட்டுப்பாட்டை கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தற்போது வைத்தியசாலைகளில் 140 மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாக தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள்

அவசர மற்றும் அத்தியாவசியம் தவிர்ந்த சத்திரசிகிச்சைகளை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் சிறிது காலத்திற்கு காலம் தாழ்த்த முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்க வைத்தியசாலைகளில் அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் எந்தவித தாமதமுமின்றி
வழமைபோன்று நடைபெற்றுவருவதாகவும் அதற்கு
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.