குசல் மெண்டிஸின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை: அஷ்லி டி சில்வா
இலங்கை (Sri Lanka) ரி20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸின் (Kusal Mendis) விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா (Ashley de Silva) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், குசல் மெண்டிஸின் அமெரிக்கா (America) செல்வதற்காக சமர்ப்பித்த விசா விண்ணப்பம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இது தொடர்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் இணைந்து குசல் மெண்டிஸ் செயற்பட்டு வருவதாக அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
விசா விண்ணப்பம்
இதேவேளை, அந்த ஆவணங்களைக் கொடுத்த பிறகு அடுத்த ஓரிரு நாட்களில் குசல் மெண்டிஸிற்கு விசா கிடைக்குமெனவும் பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்குமெனவும் அவர் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி ஜூன் இரண்டாம் திகதி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நியூயோர்க்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.