சுகாதார ஊழியர்களுக்குள் கொரோனா கொத்தணி
இலங்கையில் சுகாதார ஊழியர்களுக்குள் கொரோனா கொத்தணிகள் உருவாகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வேகமாக பரவி வரும் டெல்டா திரிபால் சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டுள்ளதா எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முழுமையாக இரண்டு கட்ட தடுப்பூசி போடப்பட்ட பல வைத்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார ஊழியர்களுக்குள் கொரோனா கொத்தணிகள் உருவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய்க்கு எதிரான போரில் முன்னணியில் இருக்கும் வைத்தியர்கள் உட்பட பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்படுவதோடு, பலர் சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில், இது சுகாதாரத் துறையில் ஊழியர் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முழுவதும் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் பிரணவாயு தட்டுப்பாடும் கணிசமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.