கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு - தமிழகத்தில் தினமும் தேங்கும் 50 இலட்சம் முட்டைகள்
இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், பல மாநிலங்களில் ஊரடங்கை அமுல்படுத்தியதாலும் இலட்சக் கணக்கில் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
தமிழகம் நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழில் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் சுமார் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு போன்றவற்றால் முட்டையின் தேவை அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக முட்டை விற்பனை அதிகரித்து காணப்பட்டது. பிற மாநில வியாபாரிகளும் அதிக எண்ணிக்கையில் முட்டைகளை கொள்முதல் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது 3 நாட்கள் இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் சுமார் 50 லட்சம் முட்டைகள் பண்ணைகளிலும் குளிர்பதனக் கிடங்குகளிலும் தேக்கம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.