தைத்திருநாளன்று இடம்பெற்ற துயரம் - சடலமாக மீட்கப்பட்ட மாணவன் -சோகமயமானது கிரான் (படங்கள்)
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாகவத்தை கடலில் தைப்பொங்கல் தினமான நேற்று குளிக்கச் சென்ற மாணவர்களில் இருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில் பாடசாலை வீதியை சேர்ந்த எஸ்.அக்சயன் (வயது 16) என்ற மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (14.01.2020) எட்டு மாணவ நண்பர்கள் குளிக்கச் சென்றதில் அவர்களில் மூவரை கடல் அலை அடித்துச் சென்ற சமயம் ஒருவர் தத்தளித்த நிலையில் மீனவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டதுடன் மற்றைய இரண்டு மாணவர்கள் காணமல் போன நிலையில் ஒருவரது சடலம் இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்துடன் கிரான் பிரதான வீதியை சேர்ந்த ஜீ.சிவானந்தன் (வயது 16) என்ற மாணவரது சடலம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
பொங்கல் தினத்தில் கிரான் தேசிய பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் 08 மாணவர்கள் நண்பகல் வேளை அருகிலுள்ள கடற்கரைக்கு சென்று குளித்தவேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் கிரான் பிரதேச மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
