வடக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் அவுஸ்திரேலியா!
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில், தம்மால் முடிந்த முழுமையான ஒத்துழைப்பை அவுஸ்திரேலியா வழங்கத் தயாராக உள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் உறுதியளித்தார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு இன்று (14.01.2025) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை சந்தித்து, அரசியல், பொருளாதார மற்றும் அபிவிருத்தி சார்ந்த முக்கிய கலந்துரையாடல்களை நடத்தினார்.
சந்திப்பு
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு உறவுகள், ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவான கூட்டுறவுகள் மற்றும் வடக்கின் நிலவரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்த சந்திப்பின் போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அவுஸ்திரேலியாவில் எமது புலம்பெயர் உறவினர்கள் வாழ்வதாகவும் அவர்களின் பங்களிப்பையும் பெற்று தருவதற்குரிய துணையாக தூதுவர் செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
தெற்கில் எவ்வாறு இனவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றனவோ, அதேபோன்று வடக்கிலும் சில இனவாத சக்திகள் செயற்படுவதாகவும் இச்சக்திகள் மக்களின் உண்மையான தேவைகளைப் புறக்கணித்து, அபிவிருத்தி பணிகளை தடைசெய்யும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றன என்பதையும் அமைச்சர் இதன்போது எடுத்து காட்டினார்.
இந்நிலையில், இலங்கையில் இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் மக்களின் வாழ்வில் பல தசாப்தங்களாக பதிந்துள்ள வலியும், வடுக்களும் ஆற வேண்டும் மற்றும் உண்மையான நல்லிணக்கம் இந்நாட்டில் பிறக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் தூதுவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |