உலகத்தரம் வாய்ந்த Rolls-Royce Phantom முதல் முறையாக இலங்கையில்!
இலங்கையின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரான டட்லி சிறிசேன, ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் பேண்டோம் காரை வாங்கியுள்ளமை தொடர்பில் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் பணக்காரர்கள் மாத்திரம் வாங்கக் கூடிய ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் பேண்டோம் காரை வாங்கியுள்ளமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, அவர் குறித்த பதிவில் தனது ஆரம்பகால வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் தற்போதைய வெற்றி குறித்தும் பதிவிட்டுள்ளார்.
‘அரலிய’ வர்த்தகம்
குறித்த பதிவில், “சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, மிகக் குறைந்த பணத்துடனும், தனது மனைவியின் தங்க நகைகளை அடகு வைத்துத் திரட்டிய நிதியுடனும் ஒரு சிறிய லொறியை வாங்கினேன்.
42 ශ්රී 1762 என்ற இலக்கத் தகட்டைக் கொண்ட அந்த லொறிதான், இன்றைய ‘அரலிய’ வர்த்தக சாம்ராஜ்யத்தின் அடித்தளம். ஆரம்பத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த போதிலும், இலக்கை அடையும் வரை நான் ஓயவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் வாங்கிய Rolls Royce Phantom சொகுசு காருடன், தனது பழைய லொறியின் கதையையும் ஒப்பிட்டு, வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம் அல்ல, அது தொடர்ச்சியான உழைப்பின் பலன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரிசி உற்பத்தியில் டட்லி சிறிசேன பிரபலமான ஒரு தொழிலதிபர் ஆவார்.
ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் பேண்டம் கார், உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான கார்களில் ஒன்றாகும், இது மிக உயர்ந்த தரமான பொருட்கள் மற்றும் நுட்பமான கைவினைத்திறனுடன் தயாரிக்கப்படுகிறது.
பேண்டம் பெயர் 100 ஆண்டுகளைக் கடந்துள்ளமைக்காக வெளியிடப்பட்ட 25 கார்களுள் ஒன்றிற்கு டட்லி சிறிசேன இவ்வாறு உரிமையாளராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |