ஜொன்ஸ்டனுக்கு அடுத்த நெருக்கடி - விசாரணைக்கு வரும் பழைய வழக்கு!! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொழும்பு நீதிவான் நீதிமன்றில் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முன்னிலையாகுமாறு, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தல் காலப்பகுதியில், சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு புதிய சரீர பிணைகளில் இவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் மே 9 இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் அழைக்கப்பட்ட போது அவரை புதிய பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தற்பொழுது ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான பழைய வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
