காவந்திஸ்ஸ யானையின் மரணம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
உயிரிழந்த காவந்திஸ்ஸ யானையின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தி, அதற்குரிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கல்கமுவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்கமுவ பதில் நீதவான் காஞ்சனா ஹதுருசிங்க, இன்று (17.10.2026) கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, யானையின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காகப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகள்
பிரேதப் பரிசோதனை நிறைவடைந்த பின்னர், யானையின் சடலத்தை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் பாதுகாப்பாகப் புதைக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, எதிர்காலத்தில் யானையின் இரு தந்தங்களையும் மீண்டும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சடலம் புதைக்கப்பட வேண்டும் என்றும், புதைக்கப்படும் இடத்திற்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மீகலேவ வனவிலங்கு அலுவலகத்தின் பிரதேசப் பாதுகாப்பு அதிகாரி டபிள்யூ. வீரகோன் உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான வழக்கு, எதிர்வரும் காலத்தில் கல்கமுவ பிரதான நீதவான் ரவீந்திர ரஞ்சன் பண்டார முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |