முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கையின் முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை (Manusha Nanayakkara) எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மனுஷ நாணயக்கார தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்துள்ள முன்பிணை கோரல் மனு தொடர்பான விடயங்களை முன்வைப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அறிவித்தல் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈ8 விசா பிரச்சினை
இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் அனுப்புவதற்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி (Thanuja Lakmali) உத்தரவிட்டுள்ளார்.
மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் (Saliya Pieris) உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனுவை பரிசீலித்ததன் பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கைக்கும் தென் கொரியாவிற்கும் (South Korea) இடையிலான விவசாய மற்றும் மீன்பிடித் தொழிலாளர் வேலைத்திட்டத்திற்கமைய மனுதாரர் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஈ8 விசா பிரச்சினை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தமது கட்சிக்காரரான மனுஷ நாணயக்காரவை கைது செய்வதற்கு தயாராகி வருவதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்
அத்துடன், மனுதாரர் தனக்குக் கிடைத்த அதிகாரங்களின்படி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட செயல் அல்ல எனவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு அமைச்சராக இரண்டு அரசாங்கங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டதாகவும், எனவே அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர முடியாது எனவும், மனுதாரருக்கு முன்பிணை வழங்குமாறும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த விடயங்களை பரிசீலித்த நீதவான், குறித்த வழக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |