விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது ஒளிப்படத்தை வைத்திருந்த யாழ் வாசி - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் பின் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தணித்தலின் கீழ் இளைஞன் மீது பி அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.
இளைஞன் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.
வழக்கை விசாரித்த நீதிவான் இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்து இளைஞனை வரும் ஏப்ரல் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.