பொய்யான குற்றச்சாட்டு -நீதிமன்றை நாடினார் மருத்துவர் ஷாபி
பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்க உத்தரவிடுமாறு கோரி குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய நீதிபதிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (பெப்ரவரி 10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, இந்த மனு மற்றும் அதற்கான ஆவணங்கள் நேற்று முன்தினம் கிடைத்துள்ளதாகவும், அதனை ஆய்வு செய்வதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் மலட்டுத்தன்மை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து, எவ்வித நியாயமான காரணமும் இன்றி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு மீண்டும் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மனுதாரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை வரும் 17ம் திகதி பரிசீலனைக்கு அழைப்பதாக உத்தரவிட்டது.