கொவிட் பரிசோதனை -தனியார் வைத்தியசாலைகளுக்கு பறந்த புதிய வழிகாட்டுதல்கள்
கொவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த புதிய வழிகாட்டி, வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி அந்த புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
சிகிச்சைகளுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் அல்லது வைத்திய அதிகாரி ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், பெறுபேறு கிடைக்கும் வரை, மாதிரியை பெற்றுக்கொண்ட நபரை வீட்டிலோ அல்லது நிறுவனத்திலோ தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்குதல்
குறித்த நபர் கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்படும் பட்சத்தில், அது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு, பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் மற்றும் நோயாளர் ஆகியோருக்கு தெளிவூட்ட வேண்டியது வைத்தியசாலையிலுள்ள அதிகாரிகளின் பொறுப்பு.
இந்த நோயாளர், பொறுப்பு கூறும் வைத்தியரின் பரிந்துரைகளுக்கு அமைய, அனுமதி வழங்கப்பட்டுள்ள கொவிட்-19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை, தனியார் வைத்தியசாலைகள் இந்த நடைமுறைகளை மீறி செயற்படுமாக இருந்தால், கொவிட்-19 தொடர்பிலான பரிசோதனைகளை நடத்துவதற்கான அனுமதி சுகாதார அமைச்சினால் இரத்து செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.