தோண்ட தோண்ட வெளிவரும் சடலங்கள்: நீதி அமைச்சருக்கு பறந்த கடிதம்
மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்துமாறு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் (Harshana Nanayakkara) மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.
குறித்த விடயம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கிசோதி சரவணமுத்துவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் உண்மை மற்றும் நீதியை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய மறுசீரமைப்புக்கள் தொடர்பில் நாம் பல தசாப்தகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.
உண்மை மற்றும் நீதி
அந்தவகையில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் கடந்தகால வன்முறைகளுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவேண்டும்.
மனிதப்புதைகுழி விவகாரத்தில் தடயவியல் ஆய்வு உள்ளடங்கலாக அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் அதேவேளை, இவ்விடயத்தில் உண்மையைக் கண்டறிவதற்கும், நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் உரியவாறான நிபுணத்துவம் மற்றும் வளங்கள் என்பன உடனடியாகத் தேவைப்படுகின்றன.
அதற்கமைய மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதுமான செயன்முறைக்குத் துணையளிக்கக்கூடிய சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும், அவற்றின் இயலுமையை வலுப்படுத்துமாறும் கோருகின்றோம்.
வட, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி இயங்கி வருபவர்கள் உள்ளடங்கலாக இதனுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடமும் நடாத்திய நேர்காணல்களில் சில முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
சுயாதீனமான முறையில் மரபணு பரிசோதனை
தடயவியல் நிபுணத்துவத்தை வலுப்படுத்தல், சுயாதீனமான முறையில் மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்கு அவசியமான வளப்பகிர்வு மற்றும் மறுசீரமைப்புக்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சுயாதீன விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடரலுக்கு அவசியமான நகர்வுகளை மேற்கொள்ளல்.
மற்றும் மனிதப்புதைகுழி அகழ்வின் போது உரியவாறான நியமங்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்தல், மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணை செயன்முறைகளில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் ஒத்துழைப்பை உள்வாங்கல், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உளவியல்சார் உதவிகளை வழங்கல், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய செயன்முறையைக் கையாளல், இவ்விவகாரம் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடரல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான வளங்களை ஒதுக்கீடு செய்தல் என்பனவே அவையாகும்.
வலிந்து காணாமலாக்கப்படல்கள், மனிதப்புதைகுழி அகழ்வுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய விவகாரங்கள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய கட்டமைப்புக்களால் குறிப்பிடத்தக்களவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இக்கட்டமைப்புக்களின் செயற்பாடுகளில் எவ்வித அரசியல் தலையீடும் மேற்கொள்ளப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கும், அவை சுயாதீனமாக இயங்குவதற்கு அவசியமான வளங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 1 மணி நேரம் முன்
