மதுபோதையில் மாமியாரை அடித்துக்கொன்ற மருமகன்: தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் வாய்த்தர்க்கம் காரணமாக மருமகனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாமியார் உயிரிழந்துள்ளார்
குறித்த இந்த சம்பவம் நேற்றிரவு (23) இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாய்த்தர்க்கம்
உயிரிழந்தவரின் மகள் தொழில் புரிவதற்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் மகளின் இரு குழந்தைகள் மற்றும் கணவன் அவரது தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருமகன் மதுபோதையில் மாமியாருடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மாமியார் வீட்டில் தனிமையில் இருந்துள்ள போது மது போதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
மருமகன் தப்பி ஓட்டம்
பின்னர் மாமியாரின் தலை மீது பாரிய பொருள் ஒன்றால் தாக்கியதையடுத்து அவர் உயிரிழந்ததையடுத்து 30 வயதுடைய மருமகன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |