உலக சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட எதிர்பாராத வீழ்ச்சி!
அமெரிக்காவும் ஈரானும் ஓர் அமைதி ஒப்பந்தத்தை எட்டப்போவதாக சர்வதேச வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டு வரும் நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்குக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையிலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச சந்தையில் நோர்த் சீ ப்ரெண்ட் (North Sea Brent) கச்சா எண்ணெய் மற்றும் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (West Texas Intermediate) ஆகியவற்றின் விலைகள் முறையே ஒரு பீப்பாய்க்கு சுமார் 5 சதவீதம் வரை சரிவடைந்து, முறையே 99.41 அமெரிக்க டொலர் மற்றும் 92.49 அமெரிக்க டொலர் ஆகிய அளவுகளுக்குக் குறைந்துள்ளன.
முக்கிய முட்டுக்கட்டை
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தாலும், பேச்சுவார்த்தையில் உள்ள சில முக்கிய முட்டுக்கட்டைகள் இந்த விரைவான தீர்வின் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "ஒப்பந்தம் ஒன்றை அவசரமாக எட்ட வேண்டாம்" என்று அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்களிடம் தாம் அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் தனது கையிருப்பை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்க ஈரான் தயாராக உள்ளதா என்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய முட்டுக்கட்டைகளில் ஒன்றாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |