“பேரழிவை நோக்கிச் செல்கிறது இலங்கை” மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எச்சரிக்கை
இலங்கை ஒரு பாரிய பேரழிவை நோக்கிச் செல்கிறது என்கிறார் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ ஏ விஜேவர்தன (Dr. W A Wijewardena).
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தற்போதைய பொருளாதார நெருக்கடி 2022இல் தீவிரமடையும். நாம் பார்ப்பது போல், 2022 இல் அரசாங்க தேசிய வருவாயின் வளர்ச்சி எதிர்மறை அல்லது பூச்சிய அளவில் இருக்கும்.
மத்திய வங்கி பெருந்தொகையான பணத்தை அச்சிட்டு பண விநியோகத்தை அதிகரிக்க அனுமதித்துள்ளது.
டிசம்பர் 2019 முதல் ஒக்டோபர் 2021 வரையிலான காலப்பகுதியில், மத்திய வங்கி நாட்டின் பண விநியோகத்தை 3,000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. இது 39% அதிகரிப்பாகும். அதனால், பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
2022இல் அந்நியச் செலாவணி இல்லாததால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது. ரூபாய் மதிப்பு பெரிய அளவில் சரிந்து வருகிறது.
எனவே, அடுத்த ஆண்டு கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்” என எச்சரித்துள்ளார்.