மனோ கணேசனுக்கு தேசியபட்டியலில் இடம் : சஜித்தை வலியுறுத்தும் இ.தொ.கா
இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைவர் செந்தில் தொண்டமான்(senthil thondaman) வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், மலையக பெருந்தோட்ட மாவட்டங்கள் அனைத்திலும் தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்கள் தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்ய தவறியதாக சுட்டிக்காட்டினார்.
மனோ கணேசனே பொருத்தமானவர்
கொழும்பு மாவட்டம் மற்றும் மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதி ஒருவர் தேவை என்பதை எடுத்துரைத்த செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனே(mano ganeshan) அதற்கு பொருத்தமானவர் என தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களை விட ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்ட மனோ கணேசன் அதிக தமிழ் வாக்குகளை பெற்றுள்ளதாக செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
வெவ்வேறு அரசியல் கருத்துக்கள்
எனவே, புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதி ஒருவருக்கு தேசியப்பட்டியல் வழங்குவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலிக்க வேண்டும் என்றும், மனோ கணேசன் அதற்று பொருத்தமானவர் எனவும் அவர் கூறினார்.
தமிழ் மக்கள் முற்போக்கு கூட்டணிக்கும் இ.தொ.காவிற்கும் வெவ்வேறு அரசியல் கருத்துக்கள் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் அவை ஒரே கொள்கையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |