பாரிஸ் ஒலிம்பிக்கில் பதிவான 140 சைபர் தாக்குதல்கள்
நடந்து முடிந்த பாரிஸ் (Paris) ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் போது 140 சைபர் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் (France) நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி தொடங்கிய ஒலிம்பிக் இந்த மாதம் 11ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
சைபர் தாக்குதல்கள்
இந்நிலையில், போட்டிகள் தொடங்கிய தினத்திலிருந்து நிறைவடைந்த நாள் வரை 140 சைபர் தாக்குதல்கள் பதிவாகியிருந்ததாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்கள் முக்கியமாக அரசு நிறுவனங்கள், விளையாட்டு, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புக்களை குறிவைத்ததாக பிரான்ஸ் நாட்டின் அரசாங்க இணைய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், இது விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள எந்த தகவல் அமைப்புகளையும் பாதிக்கவில்லை எனவும் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, போட்டி தொடங்கும் நாளன்று பிரான்ஸ் நாட்டின் தொடருந்து கடவைகள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |