தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் - காவல்துறை வெளியிட்ட புதிய தகவல்
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வெளிநாட்டில் இருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மூன்று உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்

தேர்தல் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் இதுவரை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைய உறுப்பினர் எம்.எம். மொஹமட்டிற்கு கடந்த ஜனவரி 27ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து விலகக் கோரி தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதேவேளை, ஆணைக்குழுவின் உறுப்பினர் எஸ்.பி.திவாரத்னவுக்கும் இவ்வாறான அச்சுறுத்தல்களை இந்த மாத தொடக்கத்தில் விடுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கடந்த 27 ஆம் திகதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

தேர்தல்கள் ஆணையாளர்கள் பதவியில் இருந்து விலகுமாறு கடந்த ஜனவரி 18 ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி.திவரத்ன மற்றும் கே.பி.பி.பத்திரன ஆகிய இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவருக்குத் தெரியப்படுத்திய பின்னர் அவர்களுக்குத் தேவையான காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்ட அதேவேளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களது வீடுகளை சோதனையிட்டதுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களையும் பெற்றுக்கொண்டனர்.