இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதத்தில் இடம்பெற்ற உயிரிழப்பு விபரம் வெளியானது
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் யானை-மனித மோதல் காரணமாக 272 யானைகளும் 106 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிகின்றன.
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் 30 ஆம் திகதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் கடந்த 9 மாதங்களில், 120 யானைகள் மனிதர்களால் பட்டாசு வைத்து கொல்லப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வெவ்வேறு மனித செயற்பாடுகளும் யானைகளின் மரணத்துக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் வீதி விபத்துக்கள், தொடரூந்து விபத்துக்கள் காரணமாகவும் யானைகள் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யானைகளை துரத்துவதற்காக மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சில செயற்பாடுகளால் அவை நோய்வாய்ப்படுவதாகவும் அதன் காரணமாகவும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுர மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான யானைகள் உயிரிழந்துள்ளதுடன், அங்கு 60 யானைகள் பலியாகியுள்ளன. 20 பேர் யானை தாக்குதல் காரணமாக பலியாகியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாக பொலனறுவை மாவட்டத்தில் 55 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 13 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு யானை - மனித மோதல் காரணமாக 328 யானைகளும் 112 மனித உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காடுகள் அழிக்கப்படுவதும், யானைகள் வழமையாக சென்று வரும் பாதைகள் மனிதர்களால் வழிமறிக்கப்படுவதும் இந்த பிரச்சினைக்கு பிரதான காரணங்களாகும் என திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.