நாடாளுமன்றில் பாரிய அமளி துமளி...! சபாநாயகருக்கு எதிராக கூச்சலிடும் எம்பிக்கள்
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு (Dr. Jagath Wickramaratne) எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பிரதிச் சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலி (Rizvie Salih) மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று பாரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காலை 9:00 மணிக்கு பின்னரே பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சிறப்புரிமைப் பிரச்சினைகள் (Privilege Issues) தொடர்பான பிரதிகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றை தான் இன்னும் விரிவாகப் பரிசீலிக்காததால் உடனடியாக அவை குறித்துப் பேச அனுமதி அளிக்க முடியாது என்றும் பிரதிச் சபாநாயகர் சாலி விளக்கம் அளித்தார்.
இந்தநிலையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பது நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளைக் கடுமையாக மீறும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
விவகாரங்கள்
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி, 44 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் தயாரிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இப்பிரேரணை அக்டோபர் 12 அன்று நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரல் புத்தகத்தில் சேர்க்கப்பட்ட போதிலும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் தீர்மானத்தின் படி அது நிராகரிக்கப்பட்டு விவாதத்திற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தைத் தடுப்பது சபாநாயகரின் நடுநிலைமை, நாடாளுமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாரிய அளவில் கேள்விகுட்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அத்தோடு சபாநாயகர் அரசியலமைப்பின் படி நடுநிலையாகச் செயல்பட வேண்டிய கடமைப்பாடு உடையவர் என்றும், அரச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு தரப்பினருக்கும் தங்களது உரிமைகளைப் பயன்படுத்தச் சமமான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தநிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க மறுத்தமை நாடாளுமன்றச் சிறப்புரிமை மீறலாகக் கருதப்படுகிறதா என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உரையைத் தொடர்ந்து பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிச் சபாநாயகரின் தீர்மானத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பிச் சபையில் அமளியில் ஈடுபட்டனர்.
எழும் சிறப்புரிமைப் பிரச்சினைகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு அன்றைய தினத்திற்குள்ளேயே உரிய பதில் அளிக்கப்படும் எனப் பிரதிச் சபாநாயகர் உறுதியளித்த போதிலும், எதிர்க்கட்சியினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |