மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் - மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் (NSO) அறிவித்துள்ளது.
இன்று (05) நடைபெற்ற, 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பான பங்காளர்களின் கலந்தாலோசனை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களில் உள்ள தற்போதைய நீர்மட்டம் மற்றும் 'எல் நினோ' (El Niño) வானிலை நிலவரங்களின் கீழ் கணிக்கப்பட்டதை விட அதிகமான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, 2026 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதிக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
மின் கட்டணத் திருத்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின் கட்டணத்தை 1.46% ஆல் அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.
இவ்வாண்டின் இறுதி காலாண்டிற்காக 2.88% ஆல் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு தேசிய மின்கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனத்தினால் (National System Operator) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆரம்ப கட்ட மீளாய்வுப் பணி
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில், "இங்கு முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் கருத்துகளைக் கருத்தில் கொண்டு திறைசேரியில் ஆணைக்குழு ஆரம்ப கட்ட மீளாய்வுப் பணிகளை முடித்து, அது தொடர்பான அவதானிப்புகளுடன் கூடிய ஆலோசனைப் பத்திரிகையையும் பொதுமக்களின் கலந்தாலோசனைக்காக வெளியிட்டது.

அந்த பொதுமக்களின் கலந்தாலோசனைக்கான வாய்மொழி கருத்து தெரிவிக்கும் சந்தர்ப்பம் இன்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் கருத்து தெரிவிப்பதற்காக பல்வேறு நுகர்வோர் குழுக்கள் மற்றும் மின்சாரத் துறையின் பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 40க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான இந்த சந்தர்ப்பம் காலை 9.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.00 மணிக்கு முடிவடையும். இங்கு முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் கருத்துகளைக் கருத்தில் கொண்டு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி முடிவை எடுக்கும். அந்த முடிவு நவம்பர் இரண்டாவது வாரம் அளவில் அறிவிக்கப்படவுள்ளது என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |