இலங்கையில் உச்சம் தொடும் வாழ்க்கைச் செலவு - வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையாத நிலையில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றது
இந்நிலையில், நாட்டில் ஒருவருக்கான மாதாந்த குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவு 17,742 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட செப்டெம்பர் மாதத்திற்கான உத்தியோகபூர்வ தேசிய வறுமைக் கோட்டுத் தரவுகளின்படி இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கொழும்பு மாவட்டம்
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒருவர் மாதமொன்றுக்கு அவசியமாகச் செலவிட வேண்டிய குறைந்தபட்சத் தொகையே தேசிய வறுமைக் கோடாகக் கணிக்கப்படுகிறது.

இதன்படி, செப்டெம்பர் மாதத்தில் அதிகூடிய வறுமைக் கோடு கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு ஒருவருக்கான மாதாந்த குறைந்தபட்சச் செலவு 19,136 ரூபாயாகும்.
கம்பஹா மாவட்டத்தில் 19,037 ரூபாயாகவும், களுத்துறை மாவட்டத்தில் 18,624 ரூபாயாகவும் இந்தச் செலவு பதிவாகியுள்ளது.
அதேவேளை, குறைந்த வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு ஒருவருக்கான மாதாந்த குறைந்தபட்சச் செலவு 16,965 ரூபாயாகக் காணப்படுகிறது.
குழந்தைகளின் போஷாக்கு
இதனால் உணவு, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான செலவுகளைச் சமாளிப்பது பல குடும்பங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் சில குடும்பங்கள் தங்களது உணவுத் தேவைகளுக்கான செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உணவின் அளவு மற்றும் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தைகளின் போஷாக்கு நிலைமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |