லண்டன் செல்லும் விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம்! சிறிலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு
லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தொழிலாளர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு செல்லும் சில விமானங்களை தொடர்ந்தும் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் இருந்து லண்டனுக்கான இரண்டு விமானங்களும், லண்டனிலிருந்து கொழும்புக்கான இரண்டு விமானங்களும் கடந்த மூன்று வாரங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமான நிறுவனம் வழக்கமாக கொழும்பில் இருந்து லண்டனுக்கு தினசரி ஒரு விமானத்தை மாத்திரம் இயக்குகிறது.
இந்த ரத்துகளின் விளைவாக, ரத்து செய்யப்பட்ட விமான பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாகவும், அவர்களுக்காக வேறு விமானங்களை தயார்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் லண்டனுக்கான, விமானங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முற்றிலும் நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறி நிராகரித்து விட்டது.
எரிபொருள் நிரப்பு நடவடிக்கை
எனினும் ஹீத்ரோ விமான நிலையத்துடனான, ஆக்கபூர்வமான சந்திப்பைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் விமான நிறுவனம், அடுத்த இரண்டு வாரங்களில் நிலைமையை சரிசெய்யவும், விமான நிலையத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இதேவேளை எரிபொருள் நெருக்கடி காரணமாக, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் இந்தியாவின் சென்னை மற்றும் கொச்சின் விமான நிலையங்களில், தொடர்ந்தும் தனது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புகிறது என்றும் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
